நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி 9 ஆயிரம் ஏக்கரில் நடைபெறுகிறது. இந்த தொழிலில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வருடம் மழைக்காலம் முடிந்தவுடன் உப்பு பாத்திகள் சரி செய்யப்பட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் பகுதியில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் உப்பு உற்பத்தி வேதாரண்யம் பகுதியில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. உப்பு வாரும் பணியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் 10 மணி வரை பணியில் ஈடுபடுகின்றனர். அதிக அளவில் உற்பத்தி பணிகள் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இருப்பினும் இந்த தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.