உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 79 வாக்குசாவடிகள் பதற்றமானவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்தந்த மாவட்டங்களில் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சார்பில் பாதுகாப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிந்து வருகின்றனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட ஆய்வில் ராமநாதபுரத்தில் 16 வாக்குச்சாவடிகள், ராமேஸ்வரத்தில் 6, பரமக்குடியில் 6, கீழக்கரையில் 15, மண்டபத்தில் 5, ஆர்.எஸ் மங்கலத்தில் 6, தொண்டியில் 5, அபிராமம் பகுதியில் 4, முதுகுளத்தூரில் 3, கமுதியில் 3, கடலாடியில் 5 என மொத்தம் 79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பதற்றமான வாக்கு சாவடிகளை கண்டறிந்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பதற்றமான வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.