புதுச்சேரியில் தமிழக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் புதுச்சேரியில் இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் தனியார் பேருந்துகள் முற்றிலும் இயங்கவில்லை.ஒரு சில புதுச்சேரி அரசு மற்றும் தமிழக அரசு பேருந்துகள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ள நிலையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த இரண்டு தமிழக பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.