தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் பால் விலையை அதிகரித்து விற்பனை செய்தால் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் பால் வினியோகம் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும். மேலும் மாவட்டம் தோறும் பால் வினியோகம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பால் விலையை அதிகரித்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.