கொரோனா 3-ஆம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் குஜராத் மாநில அரசு அதிக பாசிட்டிவ் உள்ள 17 நகரங்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதை தவிர குஜராத்தின் 8 பெருநகரங்கள் மற்றும் 2 முக்கிய நகரங்களிலும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜனவரி 29ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் குஜராத் மாநிலத்தில் தற்போது தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
அதே சமயத்தில் ஜனவரி 22 முதல் ஜனவரி 29 வரை அமல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவின்போது, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான ஹோம் டெலிவரி சேவைகளை 24 மணிநேரமாக அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களை இரவு 10 மணி வரை 75% ஊழியர்களுடன் செயல்பட அனுமதித்துள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவானது மாநிலத்தில் தற்போதுள்ள தொற்றுநோய் நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நடைபெற்ற கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது அம்மாநிலத்தில் ஆனந்த் மற்றும் நாடியாத் நகரங்கள் தவிர அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், ஜூனாகத், பாவ்நகர் மற்றும் காந்திநகர் போன்ற 8 பெருநகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சுரேந்திரநகர், திரங்ராத்ரா, மோர்பி, வான்கனேர், தோராஜி, கோண்டல், ஜெட்பூர், கலவாட், கோத்ரா, விஜல்பூர் உள்ளிட்ட 17 நகரங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு இன்று (ஜன.22) முதல் அமலுக்கு வரும். இதனிடையில் மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “இரவு ஊரடங்கு உத்தரவின்போது அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்படும்.
அதாவது கடைகள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டிங், சலூன்கள், ஸ்பாக்கள், அழகு நிலையங்கள் ஆகியவை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. அதே சமயத்தில் அரசியல், சமூக மற்றும் மதக் கூட்டங்கள் அதிகபட்சமாக 150 நபர்களுடன் திறந்தவெளியில் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் இறுதிச் சடங்கில் 100 பேருக்கு மேல் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு இரவு நேர ஊரடங்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் அனைத்தும் 75% இருக்கை வசதியுடன் இயங்க முடியும். அதன்பின் திரையரங்குகள், நீர் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், ஆடிட்டோரியங்கள், நூலகங்கள் ஆகியவற்றில் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.