தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது பல கட்டுப்பாடுகளுடன் மே 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் அதில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. அதன் பலனாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. மேலும் அத்தியாவசிய தேவை என்று வீட்டை விட்டு வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மிக அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பொதுவெளிக்கு வருவோர் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடரும். அனைத்து மாவட்டங்களிலும் வாகனங்கள் அல்லது தள்ளு வண்டிகள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்யலாம். மளிகை பொருட்களை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.