நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மக்கள் பீதி அடைவார்கள் என்பதால், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று குறிப்பிட்டார்.
மேலும் திருமணங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கலாம். பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை. காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் போதிய வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்வதும் அதற்கான ஆவணங்களை வைத்துக்கொள்வதும் அவசியம் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.