தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், பெரும் தலைவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனை பயோபிக் படங்கள் என்று அழைப்பார்கள். தமிழில் இதுவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து குயின் என்ற வெப்சீரிஸ், தலைவி என்ற படமும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்க்கையை வைத்து திரைப்படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மகனாக இருந்த போதிலும் அரசியலில் படிப்படியாக முன்னேறி தற்போது முதல்வராக மாறியுள்ளார். இந்த நிலைக்கு அவர் வருவதற்கு பல இன்னல்களை சந்தித்துள்ளார். மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததிலிருந்து தற்போது முதல்வரானது வரை பல போராட்டங்களை சந்தித்துள்ளார். இதனை மையமாக வைத்து திரைக்கதை உருவாகிறதாம். இந்த படத்தை நடிகரும் கன்னிமாடம் படத்தின் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்க உள்ளாராம்.
மேலும் இதில் முக ஸ்டாலின் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.