Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மூட்டை மூட்டையாக கிடக்கும் கழிவுகள்…. மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு அபாயம்…. அதிகாரிகளின் தகவல்…!!

மருத்துவமனையில் மூட்டை மூட்டையாக குப்பைகளை சேகரித்து வைத்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்கு 300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மருத்துவமனையின் கழிப்பிடம் முன்பு மூட்டை, மூட்டையாக குப்பைகளை குவித்து வைத்துள்ளனர்.

மேலும் கழிவு நீரும், மழை நீரும் மூட்டைகளுக்கு அருகே தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அருகில் இருக்கும் கழிப்பிடத்தை நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது, குப்பைகளை தரம் பிரித்து மூட்டை கட்டி வைத்துள்ளனர். நகராட்சி வாகனம் வராததால் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே சப்-கலெக்டர் மூலம் நகராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி 100 கிலோவுக்கு மேல் கழிவு உற்பத்தி செய்பவர்கள், அவர்களை அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி கழிவுகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். மேலும் ரத்தக்கரை படிந்த பஞ்சுகள், ஊசிகள், உணவு கழிவுகள் ஆகியவற்றை அதிகமாக கொட்டுகின்றனர். எனவே தரம் பிரித்து முறையாக குப்பைகளை வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |