கேரளாவில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் 17 தமிழர்கள் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 42 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு, போன்ற பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கேரளாவில் சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து தற்பொழுது வரை தொடர் மழை காரணமாக 36 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி உள்ள நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 17 தமிழர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அதில் கேரள மாநிலம் மட்டுமல்லாமல் தமிழகத்தை சார்ந்தவர்களும் வேலை பார்த்து வருகின்றனர். மூணாறில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் பெட்டிமுடி பஞ்சாயத்தில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கிய தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதன் அருகிலேயே குடியிருப்புகளும் அமைந்துள்ளன. மேலும் அங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் வசித்து வருகிறார்கள்.
இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கி அப்படியே மண்ணுக்குள் புதைந்து விட்டன. அதிகாலை நேரம் என்பதால் அங்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைத்துவிட்டனர். அதிலிருந்து தப்பிய 3 பேர் மட்டும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் அங்கு சென்று பார்த்து, தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் எர்ணாகுளம் ,கோட்டயம், திருச்சூர், கட்டப்பனை ஆகிய இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு வந்து மும்மரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு சரிந்து கிடந்த மண் குவியல்களை நீக்கிய போது ஒரு சிறுவன் உட்பட 17 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தவாறு உயிரிழந்தது தெரியவந்தது. இறந்த 17 பேரும் தென்காசி மாவட்டம், புளியங்குடி, சங்கரன்கோவில், விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் அந்த நிலச்சரிவில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 16 பேர் மூணாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 42 பேரின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஆனாலும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருப்பதாலும், இருட்டாக இருப்பதாலும் மீட்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.
ராஜ மலையிலிருந்து பெட்டிமுடி செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் சரிந்து விழுந்து கிடப்பதால் கடந்த 4 நாட்களாக மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் ஓடும் ஆற்றில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்பு குழுவினர் வந்து சேர தாமதம் ஆகி விட்டதாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்த பயங்கர நிலச்சரிவு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸ் ஐ.ஜி அஜித்லாலுக்கு கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது. இத்தகைய நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு ட்விட்டர் பதிவு மூலம் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து 2,00,000 ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.