பூந்தமல்லியில் வயதான மூதாட்டியை ஏமாற்றி 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாடகைக்கு குடியிருந்த நபர் சொந்தமாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது சரோஜா என்ற மூதாட்டி. இவருக்கு 2 மகள்கள் . இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு தனக்கு வரும் பென்சன் தொகை மற்றும் வீட்டு வாடகை தொகையை வைத்து தனியே வாழ்ந்து வருகிறார். மூதாட்டி வசித்து வரும் வீட்டின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் ஆகும். 1,500 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் மூதாட்டி உட்பட ஆறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மூதாட்டியின் வீட்டில் 9 ஆண்டுகளாக ஸ்டீபன் என்பவரும் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் சர்வே எடுக்கும் போது மூதாட்டியின் வீட்டையும் அளவு எடுத்துள்ளனர். அப்பொழுது அங்கிருந்த ஸ்டீபன் சரோஜா பாட்டி இந்த வீட்டை தனக்கு எழுதிக் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.இதனால் சந்தேகமடைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து அவரது மகள்களுக்கு தகவல் கொடுத்தனர். அப்போதுதான் சரோஜா பாட்டி ஏமாற்றப்பட்டது அவரது மகள்களுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டியை மகனை போல் பழகி ஏமாற்றி உள்ளார் என்றும், மேலும் மூதாட்டி வயதானதால் வெளியே செல்ல முடியாத சூழலில் தனது பென்ஷன் பணம் ரூபாய் ஐந்தாயிரம் எடுக்க காசோலை கொடுத்தால், அதனை ரூபாய் 50,000 ஆக மாற்றி பணத்தை எடுத்தும் ஏமாற்றியுள்ளார். இதுவரை சுமார் 4 லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், மூதாட்டிக்கு சொந்தமான 6 வீடுகளில் வரும் வாடகை பணமான ரூபாய் எட்டு லட்சத்தையும் மோசடி செய்துள்ளார். இதுமட்டுமின்றி, மோசடியின் உச்சமாக மூதாட்டியின் சில வேலைகளுக்கு பவர் ஆஃப் அட்டார்னி இருந்தால் தான் செய்ய முடியும் என்று மூதாட்டியை நம்ப வைத்து வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கியுள்ளார் ஸ்டீபன். இது தொடர்பாக மோசடி வழக்கை பதிவு செய்து ஸ்டீபனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.