தற்கொலை செய்ய முடிவு எடுத்த மூதாட்டியை காப்பாற்றியதற்காக பெண் போலீஸ் ஏட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி காவல் நிலையத்தில் ஆனந்தவள்ளி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தவள்ளி வேலை முடிந்து தனது வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி -குமாரபாளையத்தில் இணைக்கும் காவிரி ஆற்றின் பழைய பாலத்தின் கைப்பிடி சுவர் மீது பெண் ஒருவர் ஏற முயற்சி செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தவள்ளி உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கே சென்றுள்ளார்.
அதன்பிறகு அந்த மூதாட்டியின் கையை பிடித்து இழுத்து ஏன் சுவர் மீது ஏறினீர்கள் என ஆனந்தவள்ளி கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி எனது பெயர் செல்லம்மாள் என தெரிவித்துள்ளார். மேலும் கணவரை இழந்த மூதாட்டிக்கு பிள்ளைகள் கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியின் கணவர் இறந்து விட்டதால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சிரமப்பட்ட மூதாட்டி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஆனந்தவள்ளி மூதாட்டியை தனது ஸ்கூட்டரில் அமர வைத்து வளையகாரனூரில் இருக்கும் முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து முதியோர் இல்லத்தில் இருந்த மற்ற வயதானவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை ஆனந்தவள்ளி வாங்கி கொடுத்துள்ளார். ஆனந்த வள்ளியின் இந்த செயலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.