கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜடையம்பாளையம் பகுதியில் விவசாயியான முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(55) கடந்த 21-ஆம் தேதி வீட்டில் கழுத்து அறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டில் இருந்த நகைகளும் காணாமல் போனது. இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற கல்லூரி மாணவனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் வசந்தகுமாரை பிடித்து விசாரித்த போது அவர் மூதாட்டியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அதாவது வசந்தகுமாரின் தாயார் தையல் தைத்து கொடுத்து வருகிறார். இவரிடம் சரோஜா துணிகளை தைப்பதற்கு வழக்கமாக கொடுத்து வந்துள்ளார். அந்த துணிகளை வசந்தகுமார் மூதாட்டியிடம் கொடுத்து பணம் வாங்கி வருவார். இந்நிலையில் மூதாட்டி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த வசந்தகுமார் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 14 பவுன் தங்க நகைகளை திருடி சென்று வீரபாண்டியில் இருக்கும் கடையில் அடகு வைத்து பணத்தை வாங்கியுள்ளார். அவருக்கு ஆன்லைனில் விளையாடும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் பணத்தை ஆன்லைனில் விளையாட பயன்படுத்தலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.