கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும், ரேஷன் அட்டைகளோ அல்லது அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை 2000 ரூபாயை வழங்கி விட்டதாகவும், இரண்டாம் தவணையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதனை ஏற்ற நீதிபதிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு இரண்டாம் தவணை வழங்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளதாக குறிப்பிட்டு, அவர்களுக்கு மூன்று மாதங்களில் தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்ய அரசிற்கு உத்தரவிட்டு, கிரேஸ்பானு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.