கல்லூரி மாணவர் மூளைச்சாவு அடைந்ததால் சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து அனுப்பிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் வாக்கின் தெருவில் சுப்பிரமணி(52) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் பாலாஜி(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தீபக் பாலாஜி தனது நண்பரான லோகேஷ் என்பவருடன் தந்தையின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வாகனத்தை ஒட்டியதால் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் லேசான காயத்துடன் தீபக் பாலாஜி உயிர் தப்பினார்.
இதனை அடுத்து படுகாயமடைந்த லோகேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 6-ஆம் தேதி லோகேஷ் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த லொகேஷின் பெற்றோர் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இதனை அடுத்து 18 வயது நிரம்பாத சிறுவனுக்கு மோட்டார் சைக்கிளை கொடுத்து அனுப்பிய குற்றத்திற்காக சுப்பிரமணி மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.