சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் பகுதியில் சந்தானம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊத்துக்கோட்டை தாலுகாவில் தொலைக்காட்சி நிருபராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பரான ஏழுமலை என்பவருடன் சந்தானம் பூண்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சதுரங்கப்பேட்டை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற பொக்லைன் எந்திரம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு சந்தானம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஏழுமலை லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனையடுத்து சந்தானத்தை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சந்தானம் மூளைச்சாவு அடைந்தார். அவரது மனைவி நந்தினி கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் சந்தானத்தின் உடல் உறுப்புகளை தானமாக பெற்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.