ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்து பேட்டரிகளை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர், வெரைட்டிஹால் ரோடு உள்ளிட்ட பல்வேறு ஏ.டி.எம் மையங்களில் பேட்டரிகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிங்காநல்லூர் மற்றும் வெரைட்டி ஹால் பகுதியில் ஒரே நாளில் பேட்டரி திருடு போனது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சிங்காநல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் தன்னை மெக்கானிக் என்று கூறி ஏ.டி.எம் மையங்களில் பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் இரவில் சென்றால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் செந்தில்குமார் பட்டப்பகலில் ஏ.டி.எம் மையங்களுக்கு சென்று பேட்டரிகளை திருடியுள்ளார். யாராவது கேட்டால் தன்னை மெக்கானிக் என்று கூறி நம்ப வைத்து விட்டு திருடிய பேட்டரிகளை பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவரிடமிருந்த 14 பேட்டரிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.