அமெரிக்காவில் மெக்சிக்கோ எல்லைச் சுவர் கட்டுவதாக கூறி நிதி வசூல் செய்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்ட போது, அமெரிக்காவில் மெக்சிக்கோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப் படுவதற்கான நிதி மெக்சிகோவில் இருந்து பெறப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் அதற்கான நிதியை தருவதற்கு மெக்சிகோ மறுப்பு கூறியதால், டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராணுவ நிதியை சுவர் கட்டுவதற்காக பெற்று, பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு, அவரின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பேனன்(66) வெற்றித் தூணாக இருந்தார்.
அது மட்டுமன்றி உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா 2017 ஆம் ஆண்டு விலக முடிவு செய்ததில், அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் தற்போது ட்ரம்பின் கனவு திட்டமான அமெரிக்கா- மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டும் திட்டத்தில் மிகப் பெரிய ஊழலை செய்துள்ளார். இவரும், இவருடன் மற்ற மூன்று கூட்டாளிகளும் சேர்ந்து’ நாங்கள் சுவர் கட்டுகிறோம்’ என்ற திட்டத்தை அறிவித்தனர். அதற்காக பல்லாயிரக் கணக்கான டாலர்களை நன்கொடையாக வசூல் செய்ததில் மொத்தம் 25 மில்லியன் டாலர்கள் சேர்ந்துள்ளன.
அதில் ஸ்டீவ் பேனன் தன்னுடைய சொந்த செலவுக்காக ஒரு மில்லியன் டாலர்களை பயன்படுத்தியுள்ளார். அவருடைய ஊழல் தற்போது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், கனெக்டிகட் மாகாணத்தில் ‘லேடி மே’ என்ற சீன கோடீஸ்வரர் குவோ வெங்குய்க்கு சொந்தமான படகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தன் மீதான குற்றத்தை ஏற்க மறுத்ததால், விசாரணை தொடர்ந்து நடந்தது. அதன் பின்னர் அந்த வழக்கில் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் மீதான குற்றச்சாட்டு பற்றி நீயார் தெற்கு மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆட்ரி ஸ்டிராஸ் கூறும்போது, ” ஸ்டீவ் பேனன், பிரையன் கோல்பேஜ், ஆண்ட்ரூ படோலட்டோ மற்றும் திமோத்தி ஷியா ஆகிய அனைவரும் நூற்றுக்கணக்கான நன்கொடையாளர்களை மோசடி செய்துள்ளனர். எல்லைச் சுவர் கட்டுவதில் அவர்கள் அனைவரும் தங்களின் ஆர்வத்தை பயன்படுத்தி, இந்தத் திட்டத்தில் கட்டப்படுகின்ற நிதி அனைத்தும் அப்படியே சுவர் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் என்று கூறி ஏமாற்றி மில்லியன் கணக்கான டாலர்களை வசூல் செய்துள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஸ்டீவ் பேனன் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில்,” இது மிக மோசமாக நான் உணர்கிறேன். இந்தத் திட்டத்தில் எனக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது. மேலும் இந்த திட்டம் அரசிற்கு உரிய திட்டம், தனிநபர்களுக்கு உரியது அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.