நர்ஸ் இழந்த ரூ19,000-த்தை சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டு கொடுத்தனர்.
வேலூரில் வசித்து வருபவர் திவ்யா(29). இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய செல்போனுக்கு கடந்த மாதம் வங்கியிலிருந்து அனுப்பியது போல ஒரு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அந்த மெசேஜ்ஜில் வங்கி விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இல்லையெனில் உங்களின் வங்கி சேமிப்பு கணக்கு முடக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த மெசேஜில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது.
இதை நம்பிய திவ்யா அந்த லிங்கில் சென்று தன்னுடைய பெயர், பாஸ்வேர்டு அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்தார். இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ 19 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர் வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது வங்கியில் இருந்து எந்த மெசேஜ் அனுப்பவில்லை என்று கூறினார்கள். இதையடுத்து மர்ம நபர்கள் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் திவ்யாவின் பணத்தை மீட்டு, மீட்கப்பட்டதற்கான ஆணை நகலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் அவரிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி கூறியதாவது, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அறிமுகமில்லாத நபர் வங்கி விபரங்களைக் கேட்டால் பகிர கூடாது என்றும், எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மேலும் இதுபோன்று பாதிக்கபட்டிருந்தால் 1930 என்ற இலவச உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தார்.