மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 25.19 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு கீயூஆர் கோடு பயணச் சீட்டில் 20% கட்டண தள்ளுபடி, பயண அட்டைகளை பயன்படுத்தி செல்பவர்களுக்கு 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையில் கொரோனா பரவலை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகளும் பாதுகாப்பான பயணத்திற்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் செல்லும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருப்பதுடன், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த 6 வருடங்களாக இழப்பை சந்தித்து வருவதாகவும், இத்தொகையை தமிழக அரசு செலுத்தி வருவதும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து மெட்ரோ ரயில் ஓட்டத்திற்கான செலவை ஏற்றுக் கொண்டனர். மெட்ரோ ரயிலில் போதிய வரவேற்பு இல்லாததால் 812 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதில் பயணிகள் கட்டணமாக 287 கோடி ரூபாய் வரவு கிடைத்தாலும் பராமரிப்பு செலவு போக சரியாக வருடத்திற்கு 525 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது.
இந்த மொத்த இழப்பையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறையில் சுமார் 40 ஆயிரம் கோடி கடனுள்ள நிலையில் தற்போது தமிழக அரசு இலவச டிக்கெட் கட்டணத்தையும் வழங்கியுள்ளது. இந்த நிலையில் வருடந்தோறும் மெட்ரோ இழப்பை ஈடு கட்டும் தமிழக அரசு ஏன் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் இழப்பை ஏற்பதில்லை என்று போக்குவரத்து சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. இதுவரை 3,000 கோடி வரையிலும் தமிழ்நாடு அரசு அதன் இழப்புக்கு கட்டணம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.