சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி காரணமாக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து காந்தி சிலையை இந்த மாத இறுதிக்குள் இடமாற்றம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாக முடிவெடுத்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 90 சதவீத பணிகள் நடைபெறவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படுகிறது.
இந்நிலையில் சிலை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் வரை அதனை மக்கள் பார்வையிடுவதற்கோ அல்லது மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கோ முடியாது என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தும் போது காந்தி சிலைக்கு ஏதேனும் சேதாரம் ஆகிவிடக் கூடாது என்ற காரணத்தினால் 15 கிலோமீட்டர் தொலைவிற்கு காந்தி சிலையை இடமாற்றம் செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.