மெரினா கடற்கரையில் குளிக்க வருபவர்கள் அலையில் சிக்கி மரணம் அடைவதை தடுக்கும் வகையில் புதிய அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மெரினா கடற்கரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை திறக்கப்பட்டு அதில் இருந்து இதுவரை சுமார் 13 பேர் அலைகளில் சிக்கி பலியாகியுள்ளார். அந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என மெரினா கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி குளிக்க வருவது வாடிக்கையாக உள்ளது. குடும்பத்தினருடன் வருபவர்கள் மெரினா கடற்கரையில் குளிப்பதுண்டு.
அதனால் தற்போது ஒருங்கிணைந்த அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஏற்கனவே மெரினா கடற்கரையில் அலையில் சிக்குபவர்கள் மீட்பதற்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் 24 மணி நேரமும் 25 வீரர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அலையில் யாராவது சிக்கி கொண்டால் அது பற்றிய தகவல்களை கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம் போன்ற துறைகளும் ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்து படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபடுவது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அனைத்து துறைகளையும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து அனைவருக்கும் தகவல் கொடுக்கும் வகையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தற்போது ஒருங்கிணைந்த அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அடுத்து மீட்பு பணியில் ஈடுபடும் தீயணைப்புத்துறை, கடலோர காவல்படை, கடலோர, பாதுகாப்பு குழுமம், சென்னை காவல்துறை, ஆழ்கடல் நீச்சல் தெரிந்த மீனவர்கள் என்று பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழு ஒன்றை தொடங்கியுள்ளது. கடலில் சிக்கி கொள்பவர்களின் தகவல்களை திருவல்லிக்கேணி காவல்துறையினருக்கு 9428100024 என்கின்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் மீட்புப்பணி வாட்ஸ்அப் குழுவில் அந்த தகவல்களை பரிமாறலாம்.
ஒரே நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதால் உடனடியாக மீட்பு பணி நடைபெற்று வலையில் சிக்கும் நபரை உயிருடன் மீட்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று திருவல்லிக்கேணி காவல்துறையினர் கூறியுள்ளனர். இதையடுத்து மெரினா கடற்கரையில் குளிப்பவர்களை தடுப்பதற்கு போலீசாரின் நேரடி ரோந்து பணி மட்டும் போதாது. எனவே கடலில் குளிப்பவர்கள் கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கேமராவும், அதிநவீன கோபுரங்கள் 3 நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மெரினாவில் இறப்பவர்களை தடுக்கும் வகையில் மெரினா மீட்புக்குழு என்கின்ற பல்துறைகளில் சேர்ந்து ஒருங்கிணைந்த குழு உருவாக்கும் திட்டம் தயாராகிவரும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக மெரினா கடற்கரையில் அவசர உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.