மெரினா கடலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அணில். இவரது மகன்கள் ஆகாஷ் மற்றும் ஹரிஷ். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் இருவரும் அவர்கள் நண்பர்கள் 7 பேருடன் மெரினா கடலில் குளிக்க வந்துள்ளனர். மதிய வேளையில் நண்பர்களுடன் குதூகலமாக குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் சகோதரர்கள் ஆகாஷ் மற்றும் ஹரிஷ் சிக்கிக் கொண்டுள்ளனர். பின்னர் உடன் இருந்த நண்பர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நீந்தி இரண்டு பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் சிறுவர்கள் இருவரும் மூச்சு திணறி நடுக்கடலிலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து நீந்தி சென்ற தீயணைப்பு படையினர் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.