வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையை கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்ற நிலையில் தற்போது புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆம்பூருக்கும் திருப்பத்தூருக்கும் இடையே மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக சென்னையில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலையில் விழுந்தன. அவைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வரும் நிலையில் போக்குவரத்து சேவை வழக்கம் போல் செயல்படுகின்றது. ஆனால் மெரினாவில் உள்ள ஜெயலலிதா, கருணாநிதி,அண்ணா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி அங்கு தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.