கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினார்.
இவ்வாறு மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். விவசாயிகளின் நலனைக் காக்க அனைத்து தரப்பினரின் கருத்து பிரதிபலிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.