பஞ்சாப்பில் மணப்பெண் மேக்அப் கலைந்துவிடும் என்று முகக்கவசம் அணியாமல் சென்றதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள கன்னா என்ற பகுதியில் நேற்று ஒரு திருமணம் நடந்துள்ளது. இதனால் மணப்பெண்ணிற்கு ஒப்பனை செய்வதற்காக உறவினர்கள் அழகு நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணப்பெண்ணுக்கு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு உறவினர்களுடன் வாகனத்தில் மணப்பெண் மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்துள்ளார்.
சண்டிகரில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மணப்பெண் வந்த வாகனத்தை காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர். அப்போது வாகனத்தில் (மணப்பெண் தவிர), குழந்தைகள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்துள்ளனர்.
இதுகுறித்து மணப்பெண்ணிடம் காவல்துறையினர் கேட்டுள்ளனர். அதற்கு, அதிகமாக செலவு செய்து ஒப்பனை செய்தது கலைந்துவிடும் என்று மணப்பெண் பதிலளித்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினரும் ஆதரிக்கின்றனர். இதனால் மணப்பெண்ணிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு, அதன் பிறகு அங்கிருந்து அனுப்பப்பட்டார்.