இந்தியாவின் வளர்ச்சியை விரும்புவோர் “மேக் இந்தியா நம்பா் 1” இயக்கத்தில் சேருவதற்கு 9510001000 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்க தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று காணொலி மூலம் தில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, “நான் இன்று ஒரு எண்ணை வெளியிடுகிறேன். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, உலகத்தில் முதலிடத்தில் சக்தி வாய்ந்த நாடாக மாற்ற விரும்புபவர்கள் இந்த இயக்கப் பணியில் சேர வேண்டும். இதற்கென நீங்கள் 9510001000 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்பாக இந்தியாவை உலகின் முதல்நாடாக மாற்றுவதற்கான “இந்தியாவை முதலிடத்திற்கு உருவாக்குவோம்” (மேக் இந்தியா நம்பா் 1) எனும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அளவிலான லட்சிய பிரசார பணித் திட்டத்தை முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியில் கடந்த புதன்கிழமை தொடங்கினாா். அத்துடன் அனைத்து குடிமக்களும், அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தில் சேருமாறு அவா் அழைப்பு விடுத்தாா். பொதுமக்களும் இந்த தேசியப்பணியில் சேர வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து நாடு முழுதும் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.