12ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் உள்ள மேசையை உடைக்கும் வீடியோ வெளியான நிலையில் பள்ளியில் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.. இந்த பள்ளி கடந்த 23ஆம் தேதி ஒரு மணி நேரத்துக்கு முன்பாக விடப்பட்ட நிலையில், பள்ளி விடும் போது மாணவர்கள் வீட்டுக்கு செல்லாமல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சிலர் வகுப்பறையில் இருக்கக்கூடிய இரும்பு மேசைகளை உடைத்து அதை நாசம் செய்துள்ளனர்..
இது தொடர்பாக பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்துரைத்த போது, அதையும் பொருட்படுத்தாது அட்டகாசத்தில் ஈடுபட்டு உள்ளனர்.. இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. அதன்பின் மாணவர்கள் அங்கிருந்து ஓடி உள்ளனர்..
இந்நிலையில் இது தொடர்பாக தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலூர் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) பூங்கொடி வட்டாட்சியர் செந்தில்குமார்,மாவட்ட கல்வி அதிகாரி சம்பத் ஆகிய மூவர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.. முதல் கட்டமாக மாணவர்கள் உடைத்த மேசைகளை ஆய்வு செய்தனர்.. அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.. மேலும் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவதற்கு காரணம் என்ன? எதனால் இப்படி செய்தீர்கள்? என்று விசாரித்து வருகின்றனர்..