தமிழகத்தில் கொரோனா பரவல் காலத்தில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் புதிதாக ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே கோடை சிறப்பு ரயிலாக கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 1ஆம் தேதி வரை வாரத்தில் ஒரு நாள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு 7:00 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் தெங்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக மறுநாள் அதிகாலை 3.48 மணிக்கு உடுமலைக்கு வந்து இங்கிருந்து 3.50 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு வந்து சென்றடையும்.
இதனையடுத்து அதன் மறு மார்க்கத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு கோவை பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு இரவு 10:33 மணிக்கு வந்து, இங்கிருந்து 10. 35 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவள்ளி புத்தூர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ் கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வழியாக மறுநாள் காலை 7:45 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பகுதியில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளதால் ரயில் பயணிகளின் கூட்டம் இருந்தது. இந்நிலையில் இந்த ரயில் தொடர்ந்து இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக இந்த ரயில் கடந்த மாதம் ஜூலை 21ஆம் தேதி முதல் இந்த மாதம் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை கடந்த மே ஜூன் மாதங்களில் இயக்கப்பட்டது போன்று வாரத்தில் ஒரு நாள் இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு இந்த ரயில் சேவை தொடர்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டுள்ள நிலையில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். அதுவும் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.