மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. கர்நாடகமாநில காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்து இருப்பதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து உள்ளது. இதில் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து 78 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அங்கு உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பரிசல் இயக்க மற்றும் அருவிகளில் குளிக்க தடைநீடிக்கிறது.
அதேபோன்று மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே அளவில் நீடிக்கிறது. அணை முழுமையாக நிரம்பி இருப்பதால், அணைக்கு வருகிற உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் விநாடிக்கு 21,500 கன அடியும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியே 63,500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 200 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர்இருப்பு 93.47 டிஎம்சியாக இருக்கிறது.