சேலத்தில் மேட்டூர் – சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.
மேட்டூர் அணையில் இருந்து மழைக்காலத்தின் போது வெளியேறும் வெள்ள உபரி நீரை சரபங்கா நிலப்பகுதியில் வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் செய்து திருப்பி விடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் அதற்கான ஆய்வு மற்றும் வறண்ட நிலப்பகுதிகளை சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நீர்வளத்துறை சார்பில் உபரிநீரை கொண்டு செல்லும் இந்த திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் நடைபெற்றது.
565 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை, மின் மோட்டார் மூலம் 100க்கும் மேற்பட்ட ஏரி-குளங்களுக்கு நீரேற்றம் செய்ய இயலும்.
இதன் மூலம் ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். வறட்சிக்கு உள்ளான நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய ஒன்றிய பகுதிகளில் உள்ள நிலங்களும் பாசன வசதிபெறும். மேலும் அந்த பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.