கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரவு 9.30 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து கோவை அவிநாசி சாலை எல்.ஐ.சி சிக்னல் வளைவில் வேகமாக திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி அவினாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பால தூணில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த கண்ணன், கண்டக்டர் முகமது(45), பயணிகள் சதீஷ்குமார்(47), வசந்தாமணி(65), தனிஷ்கா(9) ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.