Categories
மாநில செய்திகள்

மேயர் சுந்தரி ராஜாவின் அசத்தல் பேச்சு…. முதல் கூட்டத்திலேயே அதிரடி நடவடிக்கை…!!!

முதல் பெண் மேயராக மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டத்தில் சுந்தரி ராஜா தலைமை தாங்கியுள்ளார்.

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டமானது நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முதல் பெண் மேயரான சுந்தரி ராஜா தலைமை தாங்கியுள்ளார். மேலும் இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது மேயர் சுந்தரி ராஜா பேசியதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, முதல் பெண் மாநகர மேயராக தேர்ந்தெடுப்பதற்கு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் பரிந்துரை செய்வதற்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்த மாமன்றம் மேம்பட அனைத்து வகையிலும் உடனிருக்கும் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.

மேலும் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் பகுதியில் உள்ள அனைத்து துறைகள் மற்றும் தங்கள் பகுதிகளை மேம்படுத்த தேவையான கோரிக்கைகளை எங்களுக்குத் தெரிவித்தால், அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசி உள்ளனர்.

பிரகாஷ் (திமுக): எங்களுடைய பகுதியில் தெரு மின்விளக்கு சரியாக எரியவில்லை. குப்பைகள் சரியாக அகற்றப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரிதா (விசிக): எங்களுடைய பகுதியில் பல்வேறு தெருக்களில் சாலை வசதிகள் மற்றும் வடிகால் வாய்க்கால் பழுதடைந்துள்ளது. மாலை நேரங்களில் கொசு தொல்லை அதிகரித்து மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீதா குணசேகரன் (திமுக): எங்கள் வார்டு பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இதையடுத்து மேயர் சுந்தரி ராஜா கூறியுள்ளதாவது, கடலூர் நகராட்சியில் குப்பைகள் கொட்டுவதற்கு வெள்ளப்பாக்கம் பகுதியில் புதிய கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உங்களுடைய பகுதிகளில் உள்ள குறைகளை அதிகாரிகளுடன் பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சுந்தரி ராஜா உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு கடலூர் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டத்திலேயே மக்கள் குறைகளை தீர்க்க அடிக்கடி ஆய்வு செய்து, உடனே நடவடிக்கை எடுப்பேன் என்று, மேயர் பேசியிருப்பது அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |