விசிக தலைவர் திருமாவளவன் சென்னை மாநகராட்சியை பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் அடிப்படையில் தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும் தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து இந்த கோரிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் எழுப்ப தொடங்கினார். அதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் திமுக அரசு ஆவடி, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகளை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி தனி தொகுதிகளாக அறிவித்துள்ளது. இதையடுத்து திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு வாழ்த்துக்களை கூறினார். அதோடு மட்டுமில்லாமல் திருமாவளவன் அந்த சந்திப்பின் போது ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றையும் முன் வைத்து விட்டு வந்துள்ளார்.
அந்த கோரிக்கையானது ஸ்டாலினையும், திமுகவையும் அதிகமாக கொதிக்க வைத்துள்ளது. இதற்கிடையே விசிக மூத்த நிர்வாகி ஒருவர், “எங்கள் தலைவர் திருமாவளவன் தேர்தல் வியூகங்களை நன்றாக வகுத்துள்ளார். அந்த வகையில் ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை தனது கால்தடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பதித்துவிட்டது. தற்போது தமிழகத்தில் ஏதாவது ஒரு மாநகராட்சியை கைப்பற்றுவது தான் எங்களுடைய இலக்கு.
அதற்கான வாய்மொழி கோரிக்கையையும் திமுக தலைமையிடம் வைத்துள்ளோம். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆறு தொகுதிகள் விசிகவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த எங்கள் கட்சிக்கு திமுக மாநகராட்சியில் சீட்டு தருவதாக மறைமுகமாக நினைவுபடுத்தியது. எனவே திமுக சொன்னதை செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
எனவே மாநகராட்சி மேயர் பதவியை தட்டி தூக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான முயற்சியில் தான் தற்போது தலைவர் திருமாவளவன் ஈடுபட்டுள்ளார்” என்று விசிக மூத்த நிர்வாகி கூறியுள்ளார். எனவே விசிக மூத்த நிர்வாகியின் இந்த கூற்றை பார்க்கும் போது திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைத்த கோரிக்கை மேயர் பதவி தான் என்பது உறுதியாகியுள்ளது.