நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலங்களை நத்தம் புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தி தமிழக அரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அடுத்த பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 2800 வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதி மக்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மக்களின் கோரிக்கையை முதலமைச்சரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இது குறித்து பேசிய தொல் திருமாவளவன், தமிழக அரசு இந்த பகுதியைச் சார்ந்த மக்களை காப்பாற்றும் வகையில், இந்த நிலத்தை நத்தம் புறம்போக்கு என்று வகை மாற்றம் செய்து இவர்களுக்கு பட்டா வழங்க இருக்கிறோம் என்று நீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்தால் நீதிமன்றமும் மக்களுக்கு சாதகமாக ஒரு தீர்ப்பை தரும். ஆகவே விரைவில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று கூறியுள்ளார்.