சென்னையில் உள்ள திட்ட மேலாண்மை நிறுவனத்தின் 21-ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, ஒரு திட்டத்தை அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் தொடங்கி அதை செயல்படுத்த முயற்சி செய்யும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் தலைமை பொறுப்பில் இருப்பவர் மிகவும் திறமையானவராக இருக்க வேண்டும். இந்த தலைமை பொறுப்பை ஏற்பவரின் செயல்பாடுதான் ஒரு திட்டத்தின் வெற்றி மற்றும் தோல்விக்கு வழிவகுக்கும்.
சில அரசியல் தலைவர்கள் மற்றும் குடும்ப தலைவிகள் இயற்கையாகவே பிரச்சினைகளை தீர்ப்பதில் வல்லவராக இருப்பார்கள். பல்வேறு அரசியல் தலைவர்களின் சுயசரிதை மற்றும் வாழ்க்கை அனுபவம் தான் என்னுடைய மேலாண்மை திறன்களை மேம்படுத்திக் கொள்ள எனக்கு பெரிதும் உதவியது. மேலாண்மை துறையில் தங்களுடைய கனவை நினைவாக்க வேண்டுமென்றால் மன உறுதியுடன் செயல்பட்டு துணிவு, தொலைநோக்கு பார்வை மற்றும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். கணினி எண்ம தொழில்நுட்ப மேலாண்மை மூலம் பல்வேறு துறைகளில் அரசுக்கு ஏற்படும் பல கோடி ரூபாய் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.
அதன்பின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தின் போது பேரிடர் கொள்கைகள் முறையாக வகுக்கப்பட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொண்டு பெரும் அளவு உயிரிழப்பை தடுத்துள்ளோம் என்று கூறினார். மேலும் விழாவில் தெற்காசிய மண்டல இயக்குனர் சீனிவாசன், வழிகாட்டல் இயக்குனர் சம்பத்குமார், எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனர் அருண்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.