தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது தூத்துக்குடியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநாதபுரம்,மயிலாடுதுறை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.