நீர்த்தேக்க தொட்டியின் மீது எறிய தொழிலாளி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து 2 நாட்களாக தண்ணீர் கலங்கலாக வந்துள்ளது. இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரமசிவம் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவம் திடீரென நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டம் செய்துள்ளார். அதன் பிறகு தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளி சேற்றை அள்ளி மக்களிடம் காட்டினார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது திடீரென போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தொழிலாளி மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீயணைப்புத் துறையினர் கிராம மக்களின் உதவியுடன் உடனடியாக தொட்டியின் மீது ஏறி கயிறு கட்டி தொழிலாளியை கீழே இறக்கிறனர். இதைத் தொடர்ந்து தொழிலாளிக்கு ஆம்புலன்ஸில் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.