கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியை சேர்ந்த 25 பேர் ஒரு வேனில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். அந்த வேனை குமாரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தேவியாகுறிச்சி பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
மேலும் தருண், பாரதி, வளர்மதி, சிவக்குமார் உட்பட 12 பேர் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் லேசாக காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.