தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மே 10ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு அரியர் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது