Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மே 2-ஆம் தேதி வரை இப்படி தான்..! வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும்… 24 மணிநேர பாதுகாப்பு பணி..!!

திண்டுக்கல் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 2,673 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 77 சதவீதம் பேர் மாவட்டம் முழுவதும் வாக்களித்தனர். இதையடுத்து கட்டுப்பாட்டு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குபதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை சீல் வைக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை மண்டல வாரியாக அமைக்கப்பட்ட குழுவினர் சேகரித்து எடுத்து வந்தனர். அவை அனைத்தும் திண்டுக்கல் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரிக்கு வாக்கு எண்ணுவதற்காக கொண்டுவரப்பட்டது. அவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான விஜயலட்சுமி, அரசியல் கட்சியினர், தேர்தல் பார்வையாளர்கள், போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா முன்னிலையில் தொகுதிவாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டன. மேலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. இதற்காக பயிற்சி பெற்ற 5 காவல்துறையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர கட்டிடத்தின் அனைத்து பகுதிகள், வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயில், அறைக்கு செல்லும் பாதை, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டாலும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தனியாக ஒரு கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்த்து ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக தனியாக காவல்துறையினரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி முடியும் வரை இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

Categories

Tech |