தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பு சிகிச்சை மையங்களையும் முதல்வர் தொடங்கி வைத்து வருகிறார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கொரோனா இறப்பை அரசு குறைத்து காட்டுவதாகவும், இறப்பு விவரத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ஆக்சிஜன் படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலை வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதற்கு பதிலளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மே 7ம் தேதி எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போது தமிழகத்தின் ஒருநாள் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெ.டன் ஆகத்தான் இருந்தது. ஆனால் தற்போதைய ஒருநாள் கையிருப்பு ஆக்சிஜன் 650 மெ.டன் ஆகும் என்று பதில் அளித்துள்ளார்.