தெற்கு டெல்லியில் சிராக் தில்லி பகுதியிலிருந்து காவல்துறையினருக்கு நேற்று மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் கூறியதாவது, வீட்டிலுள்ள மைக்ரோவேவ் அடுப்பில் 2 மாத பெண் குழந்தை இறந்து கிடக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த வீட்டிற்கு அருகில் வசித்தவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தது தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தை இறந்ததற்கான காரணம் தொடர்பாக உடனே எதுவும் தெரியவரவில்லை.
இதையடுத்து டி.சி.பி. மேரி ஜெய்கர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடுப்பு பல்வேறு நாட்களாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. அதற்குள் பெண் குழந்தையை வைத்தது யார் என்று தெரியவில்லை. எனினும் குழந்தைக்கு தீக்காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆகவே குழந்தை இறந்ததற்கான காரணம் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. இதில் குழந்தையின் தந்தை மற்றும் மாமா வீட்டின் கீழ்தளத்தில் சிறிய மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் மறைந்துள்ள விஷயங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையில் பிரேத பரிசோதனை முடிவிலேயே கொலைக்கான காரணம் தெரியவரும். இதுவரையிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.