பிரசித்தி பெற்ற மைசூர் அரண்மனையின் நான்கு யானைகள் சரியாக பராமரிக்க முடியாத காரணத்தால் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
உலகப் புகழ்பெற்ற மைசூர் அரண்மனையையும் அங்கு நடைபெறும் தசரா விழாவையும் அறியாதவர் எவரும் இருக்க முடியாது. அங்கு ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் தசரா விழாவின் போது மைசூர் அரண்மனையின் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் தர்பார் நடத்துவதும், அங்கு நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இலட்சக்கணக்கான மக்களால் ஆண்டுதோறும் பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட மைசூர் அரண்மனையில் 6 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நான்கு யானைகளை தேர்வு செய்து வனத்துறையிடம் ஒப்படைக்க மைசூர் மண்டல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மைசூரு வனத்துறை அதிகாரி கமலா கரிகாலன் கூறுகையில்: 4 பெண் யானைகளா சீதா, ரூபி, ஜெமினி மற்றும் ராஜேஸ்வரி இவற்றிற்கு தற்போது உடல் நிலை சரியில்லாததால் அவற்றை பராமரிக்க சிரமமாக உள்ளதாகவும், அதனால் வனத்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூர் அரண்மனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் மைசூர் மகாராணி பிரமோதா தேவி யானைகளை வனத்துறையிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளித்த பின்பு அவை அழைத்துச் செல்லப்பட்டன.