Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மைத்துனரை கொலை செய்தது ஏன்….? கைதான தனியார் நிறுவன மேலாளர் பரபரப்பு வாக்குமூலம்….!!

மைத்துனரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான தனியார் நிறுவன மேலாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு திருஞானசம்பந்தர் நாயனார் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேஷ் என்ற மகனும், உமா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் உமாவுக்கும் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வசிக்கும் கணேஷ்கைலாஷ் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணேஷ் கைலாஷ் தனியார் தண்ணீர் கேன் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். கடந்த சில நாட்களாக சுப்புலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் உமா தனது தாயாரின் வீட்டிற்கு சென்று கவனித்து வந்தார்.

இந்நிலையில் சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அங்கு சென்ற கணேஷ் கைலாஷ் மைத்துனர் சுரேஷை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணேஷ் கைலாஷ் கிரைண்டர் கல்லை எடுத்து சுரேஷ் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் பரிதாபமாக உயிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் கணேஷ் கைலாசை கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் கணேஷ் கைலாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, மைத்துனர் சுரேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் எனது மாமனார் இறந்துவிட்டதால் அவருக்கு வந்த ஓய்வூதிய தொகையை சுரேஷ் வாங்கி கொண்டு, குடும்பத்திற்கு செலவிடாமல் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். அப்போது சுரேஷ் அங்கிருந்த எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அரிவாளின் பின்பகுதியால் அடித்து துன்புறுத்தினார். இதுகுறித்து எனது குழந்தைகள் செல்போனில் தொடர்பு கொண்டு என்னிடம் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கு சென்று மைத்துனர் சுரேஷை கண்டித்தேன். அப்போது எங்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரத்தில் கிரைண்டர் கல்லை தூக்கி சுரேஷின் மீது போட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கணேஷ் கைலாஷ் கூறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கைதான கணேஷ் கைலாசை காவல்துறையினர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |