ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவற்றில் 11 பேர் தி்.மு.க., 2 பேர் பா.ஜ.க., ஒருவர் அ.தி.மு.க., ஒருவர் கொ.ம.தே.க. ஆவர். மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டான காட்டுப் பாளையம் பகவதி நகரில் 2 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை அமைக்க கட்டிட அனுமதி வழங்குவது குறித்த தீர்மானம் நேற்று முன்தினம் 8 தி.மு.க. உறுப்பினர்களால் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தின் முன் திரண்டனர்.
அதே நேரம் தி.மு.க-வை சேர்ந்த 1வது வார்டு உறுப்பினர் ரஞ்சித், 11வது வார்டு உறுப்பினர் சித்ரா, 13வது வார்டு உறுப்பினர் காந்திமதி, அ.தி.மு.க-வை சேர்ந்த 8வது வார்டு் உறுப்பினர் கவின் குமார், பா.ஜ.க. 7வது வார்டு உறுப்பினர் சத்யாதேவி, 14வது வார்டு் உறுப்பினர் செல்வி, கொ.ம.தே.க.வை சேர்ந்த 2வது வார்டு உறுப்பினர் பரிமளாதேவி போன்றோர் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்து பேரூராட்சி அலுவலகத்தில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு காட்டுப் பாளையம் பகவதி நகரை சேர்ந்த பொதுமக்களும் ஆதரவு தெரிவித்தனர். அதன்பின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களும், பொதுமக்களும் சிறிதுநேரம் கழித்து கலைந்து சென்றனர்.