Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 35 லட்ச ரூபாய் இழப்பு…. சடலமாக தொங்கிய நபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

ஆன்லைனில் ரம்மி விளையாடி 35 லட்ச ரூபாய் பணத்தை இழந்த நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் விக்னேஸ்வரா நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜனனி என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் இருந்த பிரபுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஜனனி வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு ஜனனி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கிரெடிட் கார்டு மூலமாக பிரபு 15 லட்ச ரூபாய் பணத்தை வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.

மேலும் வீட்டுக் கடனை அடைப்பதற்காக பிரபுவின் தந்தை 20 லட்ச ரூபாய் பணத்தை அவருக்கு கொடுத்துள்ளார். மொத்தம் 35 லட்ச ரூபாய் பணத்தையும் ஆன்லைனில் ரம்மி விளையாடி பிரபு இழந்துவிட்டார். இதனையடுத்து வாங்கிய கடனை அடைக்கும் படி வங்கியிலிருந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |