பீரோவை உடைத்து 70 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி வீனஸ் காலனி 2-வது பிரிவு தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் காலையில் கண்விழித்த தம்பதியினர் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சீனிவாசன் வேளச்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் பைப் வழியாக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து வீட்டிற்குள் வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.