நாகையில் அரசு பேருந்தில் மோதியதில் வியாபாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள பரவை சந்தை சாலையோரத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜா அலாவுதீன் என்பவர் வளையல் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மொபட்டில் கடைக்கி தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார். புத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த அரசு பேருந்து மீது மொபட் எதிர்பாராதவிதமாக வேகமாக மோதியது.
இதில் பேருந்திற்கு அடியே சென்ற ஹாஜா அலாவுதீன் சக்கரத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் ஹாஜா அலாவுதீன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நாகை டவுன் காவல்துறையினர் ஹாஜா அலாவுதீன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.