மொபட் மீது கார் மோதி படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கோலாரம் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது மொபட்டில் நாமக்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளர். இந்நிலையில் திருச்செங்கோடு உஞ்சனையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக சென்றுகொண்டிருந்த கார் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.
இந்த விபத்தில் பாலசுப்பிரமணி பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் பாலசுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மொபட்டில் மோதி விட்டு நிற்காமல் சென்ற காரைத் தேடி வருகின்றனர்.